பிரதமர் மோடியின் ‘திமாகி நக்சல்’ என்ற பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், எக்ஸ் சமூக வலைதளத்தில் ‘திமாகி நக்சல் ஜனதா கட்சி’ என்ற பெயரில் புதிய கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இந்த கணக்கு தற்போது அரசியல் மற்றும் சமூக தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டெல்லியில் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ‘திமாகி நக்சல்’ மனநிலை கொண்டவர்கள் குறித்து அவர் விமர்சித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், தான் ஒரு ‘திமாகி நக்சல்’ என்று அழைக்கப்படுவதில் பெருமை கொள்வதாக கூறியிருந்தார்.இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் தொடங்கப்பட்டுள்ள புதிய ‘திமாகி நக்சல் ஜனதா கட்சி’ கணக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட சில முக்கிய அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் கணக்குகளை மட்டுமே பின்தொடர்ந்து வருகிறது.மேலும், நடிகர் பிரகாஷ் ராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்த கருத்து ஒன்றையும் இந்த புதிய கணக்கு மறுபதிவு செய்துள்ளது. இதனால், இந்த கணக்கு யாரால் தொடங்கப்பட்டது என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.இதற்கிடையில், மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். பிரதமர் மோடி எதிர்க்கட்சித் தலைவர்களை நேரடியாக ‘திமாகி நக்சல்’ என்று குறிப்பிடவில்லை என்றும், நக்சல் சிந்தனையை ஆதரிப்பவர்கள், இந்திய அரசியலமைப்பை நிராகரிப்பவர்கள், பிரிவினைவாதத்தை ஆதரிப்பவர்கள் உள்ளிட்டவர்களையே அவர் அவ்வாறு குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய பகுதியை துண்டிக்க வேண்டும் என்று பேசியதாக கூறப்படும் ஷர்ஜீல் இமாமின் வீடியோவையும் கிரண் ரிஜிஜு பகிர்ந்துள்ளார்.‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தையைச் சுற்றி பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த அரசியல் விவாதம் தற்போது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.

