தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு களவாடப்பட்ட திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை, இங்கிலாந்தில் இருந்து மீட்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.இந்த சிலை உள்ளிட்ட 4 பழமையான உலோகச் சிலைகள் 1957 முதல் 1967ஆம் ஆண்டு காலகட்டத்தில் கோயிலில் இருந்து திருடப்பட்டதாக 2020ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில், திருமங்கை ஆழ்வார் சிலை இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், மற்ற சிலைகள் அமெரிக்காவின் பல்வேறு அருங்காட்சியகங்கள் மற்றும் ஏல நிறுவனங்களில் இருப்பதும் தெரியவந்தது.திருமங்கை ஆழ்வார் சிலை தமிழ்நாட்டைச் சேர்ந்தது என்பதை உறுதிப்படுத்தும் அறிவியல் ஆதாரங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சேகரித்தனர். இந்த ஆதாரங்கள் இங்கிலாந்து அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டன.ஆதாரங்களை ஆய்வு செய்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள், சிலை தொடர்பான விரிவான அறிக்கையை அளித்தனர். இதனைத் தொடர்ந்து, சிலையை இந்தியாவிடம் மீண்டும் ஒப்படைக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஒப்புதல் தெரிவித்தது.இதன் அடிப்படையில், தமிழ்நாடு சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவு, இந்திய உள்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம், கலாச்சார அமைச்சகம் மற்றும் இந்திய தொல்லியல் துறை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சியால், திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை ஆகஸ்ட் 16, 2026 அன்று தமிழ்நாட்டிற்கு வெற்றிகரமாக மீட்கப்பட்டது.மீட்கப்பட்ட சிலையை காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் மற்றும் சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் டி. கல்பனா நாயக் ஆகியோர் முதலமைச்சர் ஜோசப் விஜயிடம் காண்பித்தனர். சிலையை மீட்டுக் கொண்டுவந்த அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.அனைத்து சட்டப்பூர்வ நடைமுறைகளும் முடிந்த பிறகு, திருமங்கை ஆழ்வார் சிலை மீண்டும் கும்பகோணம் சௌந்தரராஜப் பெருமாள் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். அங்கு கோயிலின் வழக்கமான சமய சம்பிரதாயங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளின்படி சிலை மீண்டும் நிறுவப்பட்டு, பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

