அதிமுக கட்சி பெயர், கொடி உள்ளிட்டவற்றை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்த தனி நீதிபதி விதித்த இடைகால தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அதிமுக-விலிருந்து இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அந்த கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்திவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஒ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீடு மனு மீது நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. இரு தரப்பு வாதங்களும் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நிறைவடைந்திருந்த நிலையில், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் அமர்வு தீர்ப்பு வழங்கியது. அப்போது, அதிமுக கொடி சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ் அணியினருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க நீதிபதிகள் மறுத்தனர். மேலும், ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உரிய நிவாரணம் பெறும்வகையில் தனி நீதிபதியை அணுகும்படியும், அவ்வாறு தாக்கல் செய்யப்படும் மனுவை சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளனர்.

