12 சதவீதத்திற்கும் அதிகமான ஆல்கஹால் கலந்த இருமல் சிரப், டானிக் மற்றும் டிஞ்சர் வகை மருந்துகளை இனி மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் வாங்க முடியாது என்று ஒன்றிய அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.இந்த உத்தரவின்படி, 30 மில்லிலிட்டருக்கு மேற்பட்ட அளவில் விற்பனை செய்யப்படும் இவ்வகை மருந்துகளை வாங்கும் நபர்களின் பெயர், முகவரி, தொடர்பு எண் மற்றும் மருத்துவரின் பரிந்துரை விவரங்களை மருந்தகங்கள் தனி பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும்.இளைஞர்கள் மற்றும் சிலர் போதை நோக்கத்திற்காக இருமல் சிரப் மற்றும் ஆல்கஹால் கலந்த மருந்துகளை தவறாக பயன்படுத்துவதாக பல்வேறு மாநிலங்களில் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோடீன் மற்றும் அதிக அளவு ஆல்கஹால் கொண்ட சில மருந்துகள் தவறான பயன்பாட்டிற்கு உள்ளாகி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மருந்துகளின் தவறான பயன்பாட்டை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதனால் இனி மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு இல்லாமல் இவ்வகை மருந்துகளை வாங்குவது கடினமாகும்.

