தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், தமிழ்நாட்டின் மூன்றாவது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.
தமிழ்நாட்டில் முதல்முறையாக கடந்த 2006 – 11 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஆக மு.கருணாநிதி இருந்தார். உடல் குறைவு காரணமாக கடந்த 2009-ஆம் ஆண்டு அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகப் பொறுப்பேற்றார். மே 29 ஆம் தேதி 2009 ஆம் ஆண்டு துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் 2011 ஆம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி முடியும் வரை பொறுப்பில் இருந்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். ஒரு ஆண்டு 9 மாதங்களுக்குப் பிறகு அவருக்குத் துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை மாலை 3:30 மணிக்கு ராஜ்பவனில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் மூன்றாவது துணை முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ளார்.

