இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவரின் கொலைக்கு எதிரான நடவடிக்கையாக, ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெஹ்ரானில் உள்ள அதிகார வட்டாரங்கள் தகவல் வழங்கியுள்ளன. தகவல் அறிந்த நபர்களின் கூறுமாறு, லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் உள்ளூர் ஆயுதக் குழுக்களுடன் ஈரான் தொடர்ந்து தொடர்பில் இருந்தது. இந்நிலையில், தெற்கு லெபனானில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் சையது ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்ததைத் தொடர்ந்து, இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை வெளியிட்ட தகவலின்படி, பெய்ரூட்டில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் சையது ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்துள்ளார். இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில், “சையது ஹசன் நஸ்ரல்லா இனி தீவிரவாதத்தால் உலகை அச்சுறுத்த முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம், தங்களது தலைவரும், அமைப்பின் நிறுவனர் ஒருவருமான ஹசன் நஸ்ரல்லா, இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளது. சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், “நஸ்ரல்லா தனது சக தியாகிகளுடன் இணைந்து கொண்டார். பாலஸ்தீனத்துக்கு ஆதரவான, எதிரிகளுக்கு எதிரான புனிதப் போர் தொடரும்” என ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஹசன் நஸ்ரல்லா இந்த குழுவை வழிநடத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், ஹசன் நஸ்ரல்லாவின் மரணத்துக்கு பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் இரங்கல் தெரிவித்துள்ளது.

