இந்திய இளம் பெண் ஊழியர்கள் தான் உலகிலேயே அதிக நேரம் வேலை செய்கின்றனர் ; அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் பொருளாதாரம் மற்றவை முதன்மை செய்தி

இந்திய இளம் பெண் ஊழியர்கள் வாரத்திற்கு சராசரியாக 55 மணி நேரம் வேலை செய்கின்றனர், உலகிலேயே இது அதிக நேரம் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organization ) (ஐ.எல்.ஓ) ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
அண்மையில், புனேவில் உள்ள பன்னாட்டு ஆலோசனை நிறுவனமான எர்ன்ஸ்ட் அண்ட் யங் (EY) நிறுவனத்தில் பணியாற்றி வந்த 26 வயது பெண் ஊழியர் அன்னா செபாஸ்டியன் பணிச்சுமையால் உயிரிழந்ததாக அவரது தாய் உருக்கமாக எழுதிய கடிதம் கவனம் பெற்றது. அக்கடிதத்தில் அன்னாவின் தாயார், “எனது மகள் பள்ளி, கல்லூரியில் நன்றாக படித்தாள். சிஏ தேர்விலும் டிஸ்டிங்ஷனில் தேர்ச்சி பெற்றாள். இதுதான் அவளது முதல் பணி. இதில் ஆர்வத்துடன் பணியை தொடங்கினார். ஓய்வின்றி உழைத்தாள். அவளுக்கு வழங்கப்பட்ட பணிகளை செய்து முடித்தாள்.
இருப்பினும் நீண்ட நேரம் பணியாற்றியது அவளுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை கொடுத்தது. மார்ச் மாதம் பணியில் சேர்ந்தவள், ஜூலை மாதம் உயிரிழந்தாள். வேலைக்காக அவளது உயிரையே கொடுப்பாள் என என் குழந்தை அறியவில்லை. குறிப்பாக ஷிப்ட் நேரம் முடியும்போது அவரது மேலாளர் சில பணிகளை கொடுத்து வந்தார். அதனால் ஓவர் டைமாக பணியாற்ற வேண்டிய நிலை. வார விடுமுறை நாட்களிலும் பணியாற்ற வேண்டி இருந்தது.
கடந்த 2023-ம் ஆண்டு இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் ஊடகத் துறையில் பணியாற்றும் பெண்கள் வாரத்துக்கு சராசரியாக 56.5 மணி நேரம் பணியாற்றியுள்ளனர். வாரத்துக்கு 5 நாட்கள் பணி எனக் கணக்கில் கொண்டால் ஒரு நாளைக்கு 11 மணி நேரம் வீதம் வேலை செய்துள்ளனர். அதுவே 6 நாள் பணி எனக் கணக்கில் கொண்டால் ஒரு நாளைக்கு சராசரியாக 9 மணி நேரம் பணி செய்துள்ளனர். இந்தியாவில் அறிவியல், தொழில்நுட்ப துறை சார்ந்த பணிகளில் உள்ள பெண்கள் வாரத்துக்கு சராசரியாக 53.2 மணி நேரம் வேலை செய்துள்ளனர். இந்தியாவில் ஒரு ஆசிரியை சராசரியாக வாரத்துக்கு 46 மணி நேரம் பணி செய்துள்ளனர் என ஐஎல்ஓ அறிக்கை புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது.
இந்தியாவில் பெண் ஊழியர்கள் பணி நேரமானது அவர்களின் வயது பொறுத்து அமைகிறது. வயது குறையக் குறைய பணி நேரம் அதிகரிக்கிறது. ஐடி / ஊடகத் துறையில் உள்ள பெண்களில் 24 வயது வரையிலானோர் வாரத்துக்கு சராசரியாக 57 மணி நேரம் வரை பணி செய்கின்றனர். மற்ற துறைகளில் இதே வயது வரம்பில் உள்ளவர்கள் 55 மணி நேரம் பணி புரிகின்றனர்.
இந்த சராசரியை உலகத் தரவுகளை ஒப்பிடும்போது இருப்பதிலேயே இந்தியாவில் தான் பணி நேரம் அதிகமானதாக இருக்கிறது.
ஐஎல்ஓ.,வின் இந்த அறிக்கையும், அன்னாவின் தாய் எழுதிய கடிதமும் இந்தியாவில் பெண்களின் பணி நேரங்கள் தொடர்பாக புதிய வரையறைகளுகான தேவை என்ன என்பதை அழுத்தமாக உணர்த்துவதாக பணியாளர் நலன் சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *