பாதயாத்திரை மேற்கொண்டுள்ள டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது, மர்ம நபர் திரவம் வீசியதால் பரபரப்பு

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது, மர்ம நபர் ஒருவர் திரவம் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு டெல்லியின் மாளவியா நகர் பகுதியில், தனது ஆதரவாளர்களுடன் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது திரவம் ஒன்றை ஊற்றியுள்ளார். உடனே கெஜ்ரிவாலின் ஆதரவாளர்கள் அந்த நபரை பிடித்து தாக்கியுள்ளனர். அந்த நபர் அசோக் ஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து இந்த சம்பவத்தின் பின்னணியில் பாஜக இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் சவுரப் பரத்வாஜ் குற்றம் சாட்டினார். மேலும் இதுகுறித்து, “டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மத்திய அரசும், உள்துறை அமைச்சரும் எதுவும் செய்யவில்லை” என தெரிவித்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டு, அரவிந்த் கெஜ்ரிவால் ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் சென்றபோது, மாணவர் ஒருவர் அவர் மீது மை வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு தேச விரோதி” என்று சத்தமிட்டபடி அவர் முகத்தில் மை வீசினார். பின்னர் போலீஸாரால் அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஏவிபிவி அமைப்பைச் சேர்ந்த தினேஷ் ஓஜா என தெரிய வந்தது. இதற்கு அப்போது பதிலளித்த அரவிந்த் கெஜ்ரிவால், ”என் மீது மை வீசியவர்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும். அவர்களை நான் வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *