வினாத்தாள் கசிவு சர்ச்சையால் ரத்து செய்யப்பட்ட இளநிலை நீட் (NEET UG) தேர்வுக்கான மறுதேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ளது. தேர்வர்கள் அனைவரும் புதிய ஹால் டிக்கெட்டை கட்டாயம் பதிவிறக்கம் செய்து தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை (NTA) அறிவுறுத்தியுள்ளது.முன்னதாக மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடு காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், ஜூன் 21ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான ஹால் டிக்கெட்டுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பழைய ஹால் டிக்கெட் இனி செல்லாது என்றும் என்டிஏ தெளிவுபடுத்தியுள்ளது.மேலும், மறுதேர்வுக்கான கட்டணம் செலுத்த வேண்டும் அல்லது வினாத்தாள் தொடர்பான இணைப்புகளை (லிங்க்) அனுப்பும் போலி செய்திகள் மற்றும் மோசடிகளை நம்ப வேண்டாம் என்று மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், நீட் தேர்வு தொடர்பான மன அழுத்தம் காரணமாக தமிழ்நாட்டில் இரண்டு மாணவிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து, மாணவர்களுக்கு மனநல ஆதரவு வழங்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.

