பெங்களூரில் இன்று புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அதில் பயணித்தார். இந்த மெட்ரோ ரயில் சேவை பெங்களூர் ஆர்வி ரோட்டில் இருந்து பொம்மசந்திரா வரையிலான 19.1 கிலோமீட்டர் தொலைவுக்கானதாக இருக்கும். இந்த வழித்தடத்தில் நாளை காலை 5 மணி முதல் பொதுமக்கள் பயணிக்கலாம்.
பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவை செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் பெங்களூரில் ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் மக்களுக்கான மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் தற்போது பெங்களூர் ஆர்வி ரோட்டில் இருந்து பொம்மசந்திரா வரை மொத்தம் 19.1 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைத்து சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.
மஞ்சள் வழித்தடம் என அழைக்கப்படும் இந்த ரூட்டில் பிரதமர் மோடி இன்று மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார். அதன்படி இன்று காலை 12 மணிக்கு பிரதமர் மோடி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்து அதில் பயணித்தார். மோடியுடன், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் உள்ளிட்டவர்கள் பயணித்தனர்.
இவர்கள் தவிர 16 மாணவ-மாணவிகளுக்கு பிரதமர் மோடியுடன் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். இந்த மெட்ரோ ரயில் சேவை பெங்களூரில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் மக்களை விரைவாக பயணிக்க உதவ உள்ளது.
இந்த மஞ்சள் வழித்தடத்தில் மொத்தம் 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. அதன்படி ஆர்வி ரோடு, ராகி குட்டா இன்டர்சேஞ்ச், ஜெயதேவா ஹாஸ்பிட்டல், பிடிஎம் லேஅவுட் இன்டர்சேஞ்ச், சென்ட்ரல் சில்க் போர்டு, பொம்மனஹள்ளி இன்டர்சேஞ்ச், ஹொங்கசந்திரா, கூட்லு கேட், சிங்கசந்திரா, ஹொசரோடு, பீரதின அக்ரஹாரா, எலக்ட்ரானிக் சிட்டி, இன்போசிஸ் பவுண்டேஷன் (கோனப்பன அக்ரஹாரா), ஹுஸ்கூர் ரோடு, பயோகான் ஹெப்பகோடி, டெல்டா எலக்ட்ரானிக்ஸ் பொம்மசந்திரா என 16 ஸ்டேஷன்களை கொண்டு உள்ளது.
இந்த மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.7,610 கோடியாகும். அதாவது ஒரு கிலோமீட்டருக்கு ரூ.400 கோடி வரை செலவழிக்கப்பட்டுள்ளது. இன்று பிரதமர் மோடி இந்த மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தாலும் கூட மக்களின் பயன்பாட்டுக்கு நாளை முதல் வரும். நாளை காலை 5 மணி முதல் இந்த வழித்தடத்தில் மக்கள் பயணிக்கலாம்.
முதற்கட்டமாக இந்த வழித்தடத்தில் 3 மஞ்சள் மெட்ரோ ரயில்கள் மட்டுமே இயக்கப்பட உள்ளது. இதனால் அரை மணிநேரத்துக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. அதன்பிறகு 20 நிமிடத்துக்கு ஒருமுறை 4 ரயில்கள் இயக்கப்படும். 2026 மார்ச் மாதத்துக்கு 15 மெட்ரோ ரயில்களும் இயக்கப்படும். அந்த சமயத்தில் Peak Hours-ல் 5 நிமிடத்துக்கு ஒருமுறையும், Non Peak Hours-ல் 8 நிமிடத்துக்கு ஒருமுறையும் மெட்ரோ ரயில்கள் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

