தாய்லாந்தில் நடைபெற்ற மூத்தோர் சர்வதேச தடகள போட்டிகளில் தமிழகம் சார்ந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் பெற்ற பதக்கங்களுக்கு பொதுமக்கள் பெரிதும் பாராட்டுக்களை வழங்கி வருகின்றனர். தாய்லாந்தின் சுபசலசாய் தேசிய ஸ்டேடியத்தில் நடைபெற்ற 5வது மூத்தோர் சர்வதேச தடகள போட்டிகள் நான்கு நாட்கள் நீடித்தன. இதில் 30 வயதிலிருந்து 90 வயதுவரை உள்ள 715 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்தியாவில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட முத்துநகர் மாஸ்டர்ஸ் அத்லடிக்ஸ் செயலாளராக உள்ள கனகசபாபதி, 4X100 மீ மற்றும் தொடர் ஓட்ட பந்தயங்களில் தங்க பதக்கங்களை வென்றுள்ளார். இவரது மனைவி மகேஸ்வரி, முத்துநகர் மாஸ்டர்ஸ் அத்லேட்ஸ் பொருளாளராக உள்ளார், இவர் எட்டி எறியும் போட்டியில் தங்க பதக்கம் மற்றும் குண்டு எறிதல், தட்டு எறிதல் போட்டிகளில் வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளார். வெற்றி பெற்ற இந்த தம்பதியரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

