கோவா மற்றும் கர்நாடகாவின் கார்வார் கடற்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் கடற்படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி, இந்திய கடற்படையின் வலிமையை வெகுவாக பாராட்டினார்.
கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியப் பிரதமராக பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி நடப்பாண்டு கோவா மற்றும் கர்நாடகாவின் கார்வார் கடற்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் கடற்படை வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை இரவு ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு ராணுவ வீரர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது வீரர்களுக்கு இனிப்புகளை ஊட்டிவிட்டு பிரதமர் மோடி வாழ்த்து கூறினார்.
தொடர்ந்து வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய ராணுவத்தின் துணிச்சல் ஆகியவை ஆபரேசன் சிந்தூில் பாகிஸ்தானை எளிதாக சரணடைய வைத்ததாகக் கூறினார்.
ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் பாகிஸ்தானுக்கு தூக்கமில்லா இரவுகளை கொடுத்ததாக பிரதமர் தெரிவித்தார். ஆண்டுதோறும் தீபாவளியை தனது குடும்பத்தினருடன் கொண்டாடுவது பழக்கமாகி விட்டதாக கூறி, ராணுவத்தினரை தனது குடும்பம் என பிரதமர் கூறினார்.
நிறைவாக பிரதமர் மோடியுடன் கடற்படை வீரர்கள் இணைந்து குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

