பீகார் சட்டப்பேரவை தேர்தல்; பிரதமர் மோடி 24ம் தேதி முதல் பிரசாரத்தை தொடங்குகிறார்

அரசியல் இந்தியா செய்திகள் தேர்தல் செய்திகள் 2024 நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரத்தை பிரதமர் மோடி வரும் 24ம் தேதி தொடங்குகிறார். மொத்தம் 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பிரதமர் மோடி வரும் 24ம் தேதி பிரசாரத்தை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாட்னாவில் பாஜ மாநிலத் தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் நேற்று அளித்த பேட்டியில், ‘‘பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி பிரதமர் மோடி வரும் 24ம் தேதி சமஸ்திபுராவில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
அன்றைய தினமே பெகுசராயில் பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார். இந்த மாத இறுதிக்குள் 4 பிரச்சாரப் பேரணிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார். பீகார் தேர்தலில் பாஜ மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சிகள் இரண்டும் தலா 101 இடங்களில் போட்டியிடுகின்றன. இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஒன்றிய அமைச்சர் சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 29 இடங்களிலும் உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (ஆர்எல்எம்) மற்றும் ஒன்றிய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி தலைமையிலான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) ஆகிய கட்சிகளுக்கு தலா ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பீகார் சட்டப்பேரவை தேர்தலையொட்டி 6 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் ஆணையம் தனது பொருளாதார புலனாய்வு குழுவை கூட்டி உள்ளது. தேர்தலின் போது பணம், மது, போதைப்பொருள் வழங்குவதை தடுக்க இக்குழு கடந்த 2014ல் உருவாக்கப்பட்டது. 2014 முதல் 2019 வரை தேர்தலுக்கு முன்பாக இக்குழு கூடி ஆலோசனை நடத்தி வந்தது. தற்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இதுபோன்ற கூட்டம் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் நடந்துள்ளது. பொருளாதார புலனாய்வு குழுவில் மத்திய நேரடி வரிகள் வாரியம், மறைமுக வரிகள் வாரியம், சுங்க வாரியம், அமலாக்க இயக்குநரகம், ரிசர்வ் வங்கி என மொத்தம் 17 துறைகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *