54 இந்தியர்களைத் திருப்பி அனுப்பிய இந்தியா!

உலகம்

சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்ற 54 இந்தியர்களை அந்நாட்டு அரசு திருப்பி அனுப்பியுள்ளது. காரணம் என்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப், இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்து பல்வேறு கட்டுப்பாடுகளை இந்தியாவின் மீது விதித்து வருகிறார். அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக குறிப்பிட்ட துறையில் திறன் பெற்ற நிபுணர்களுக்கு மட்டுமே தற்காலிகமாக அனுமதிக்கப்படும் H1-B விசா விண்ணப்பக் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

H1-B விசாவில் ஒருவருக்கு பணியளிக்க வேண்டும் என்றால் சம்மந்தப்பட்ட நிறுவனம் அவருக்காக ஒரு லட்சம் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 90 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். இது கடந்த செப்.21- ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் அடுத்த 12 மாதங்கள் வரை தொடரும் என கூறப்படுகிறது. அதேபோல், ட்ரம்ப் நிர்வாகம் மாணவர் விசாக்கள் மீதான குடியேற்ற கட்டுப்பாடுகளையும் கடுமையாக்கி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் போட்ட பதிவுகளைக் கூட ஆய்வு செய்து தான் விசா வழங்கும் அளவிற்கு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தான் ஏற்கனவே H1-B வைத்திருப்பவர்களுக்கும் செப்.21- ஆம் தேதிக்கு முன் H1-B விசாவுக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் இந்த கட்டணம் பொருந்தாது என்று அமெரிக்காவின் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

அதேபோல், பன்முகத்தன்மை விசாத்திட்டத்திற்கு இந்தியர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் தகுதிப் பெற மாட்டார்கள் எனவும் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படி அந்நாட்டில் குடியேறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ந்து வெளியீட்டு வருகிறது.

இந்த நிலையில் தான் இந்தியாவில் இருந்து பிற நாடுகள் வழியாக அமெரிக்காவிற்கு குடியேற சென்ற 54 இந்தியர்கள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் 54 பேரும் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்ததாகக் குற்றஞ்சாட்டி அந்நாட்டில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். திரும்பி வந்தவர்கள் டிராவல் ஏஜெண்ட்டுகள் என்னும் போர்வையில் மோசடி நபர்கள் தங்களை ஏமாற்றி அமெரிக்கா அனுப்பியதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

அமெரிக்கா சென்று கை நிறைய சம்பாதிக்கலாம் என்று தலா ரூபாய் 40 லட்சம் மோசடி நபர்களுக்கு கொடுத்ததாக திருப்பி அனுப்பப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தென் அமெரிக்கா நாடுகள் வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டவர்கள் அங்கே கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

திருப்பி அனுப்பப்பட்டவர்களில் 30- க்கும் மேற்பட்டவர்கள் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் பஞ்சாப், தெலுங்கானா, கோவா மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த வருடத்தின் ஆரம்பம் முதலே அமெரிக்கா 2,000- க்கும் மேற்பட்ட இந்தியர்களைத் திருப்பி அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *