ஜோர்டானை வீழ்த்திய ஆஸ்திரியா அணி, கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது

உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரூப் ‘ஜே’ பிரிவு லீக் ஆட்டத்தில், அமெரிக்காவின் சாண்டா கிளாராவில் நடைபெற்ற போட்டியின் ஆஸ்திரியா, ஜோர்டான் அணிகள் மோதின. 20வது நிமிடத்தில், ஆஸ்திரியாவின் ரொமானோ ஷிமித் பாக்ஸிற்கு வெளியிலிருந்து வலது காலால் உதைத்து ஒரு பிரமாதமான கோல் அடித்து அணியை 1-0 என முன்னிலை பெறச் செய்தார். ஆனால், 2வது பாதி தொடங்கிய 5வது நிமிடத்தில் (50வது நிமிடம்) ஜோர்டானின் அலி ஓல்வான் மின்னல் வேக கவுண்டர் அட்டாக் மூலம் கோல் அடித்து 1-1 என ஆட்டத்தை சமன் செய்தார்.
இதன்பின் ஆட்டம் ஆஸ்திரியாவின் பக்கம் திரும்பியது. மாற்று வீரராக வந்த மார்கோ அர்னாடோவிச் அடித்த கோல், விஏஆர் பரிசோதனையில் ஹேண்ட்பால் என அறிவிக்கப்பட்டு நடுவர்களால் மறுக்கப்பட்டது. இருப்பினும், ஆட்டத்தின் 76வது நிமிடத்தில் ஆஸ்திரியா வீசிய கார்னர் பந்தை தடுக்க முயன்ற ஜோர்டான் டிபெண்டர் யாசன் அல் அரப், எதிர்பாராதவிதமாக பந்தைத் தனது சொந்த கோல் போஸ்ட்டிற்குள் (ஓன் கோல்) தள்ளினார். இதனால் ஆஸ்திரியா 2-1 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் ஆஸ்திரியாவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
இதில் மார்கோ அர்னாடோவிச் கோல் அடித்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெறச்செய்தார். அறிமுக அணியான ஜோர்டானை வீழ்த்திய ஆஸ்திரியா அணி, உலகக் கோப்பை வரலாற்றில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. கடந்த 1990ம் ஆண்டு இத்தாலியில் நடந்த உலகக் கோப்பையில் அமெரிக்காவை வீழ்த்தியதே ஆஸ்திரியாவின் கடைசி உலகக் கோப்பை வெற்றியாக இருந்தது. அதன்பிறகு நடந்த உலகக் கோப்பை தொடர்களில் தகுதி பெறத் தவறிய ஆஸ்திரியா அணி 36 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது முதல் லீக் ஆட்டத்திலேயே வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *