டிஜிட்டல் கைது மோசடிகளைத் தடுக்க வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களிடம் உச்சநீதிமன்றம் விளக்கம்

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் நீதி மன்றம்

டிஜிட்டல் கைது மோசடிகளைத் தடுப்பதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்தியாவில் சமீபகாலமாக டிஜிட்டல் கைது என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் பறிக்கும் சைபர் மோசடிகள் அதிகரித்து வருகின்றன.இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள், தங்களை சிபிஐ, காவல்துறை, அமலாக்கத்துறை அல்லது சுங்கத்துறை அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். பின்னர், வீடியோ அழைப்பு மூலம் பொதுமக்களைத் தொடர்புகொண்டு, அவர்கள் மீது வழக்கு இருப்பதாகவும் கைது செய்யப்படுவார்கள் என்றும் மிரட்டுகின்றனர்.சில நேரங்களில் காவல்துறை அலுவலகம் போன்ற பின்னணியை உருவாக்கி, பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்ந்து கண்காணிப்பது போல நடித்து பணம் பறிக்கின்றனர். இதனால் பலர் தங்களுடைய சேமிப்புப் பணத்தையே இழந்துள்ளனர்.இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, வாட்ஸ்அப் உள்ளிட்ட இணையதள நிறுவனங்கள் டிஜிட்டல் கைது மோசடிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.மேலும், தங்களது தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்திடமும் (I4C) சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இதற்கு முன்பாக, டிஜிட்டல் கைது மோசடிகளுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்ட சுமார் 9,400 வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.மேலும், சந்தேகத்திற்குரிய பணப் பரிவர்த்தனைகளை வங்கிகள் கண்காணிக்க வேண்டும் என்றும், மோசடி காரணமாகப் பணத்தை இழக்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளின் அலட்சியம் காரணமாக இழப்பு ஏற்பட்டது உறுதியானால் இழப்பீடு வழங்குவது குறித்தும் உச்சநீதிமன்றம் கவனம் செலுத்தியுள்ளது.இந்த வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது.பொதுமக்கள் யாரும் தொலைபேசி அல்லது வீடியோ அழைப்பில் தங்களை அதிகாரிகள் என்று கூறுபவர்களின் மிரட்டலுக்கு பயந்து பணம் அனுப்ப வேண்டாம். இந்தியாவில் டிஜிட்டல் கைது என்ற பெயரில் ஒருவரை வீடியோ அழைப்பில் வைத்து விசாரித்து உடனடியாகப் பணம் செலுத்தச் செய்வது சட்டபூர்வமான கைது நடைமுறை அல்ல.சந்தேகத்திற்குரிய சைபர் மோசடி ஏற்பட்டால் 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் அல்லது தேசிய சைபர் குற்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *