டி 20 கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரராக விராட் கோலி வரலாற்று சாதனையை படைத்துள்ளார். நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி, தேவ்தத் படிக்கலுடன் சேர்ந்து ஆட்டத்தின் ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடினார். கோலி 17 ரன்களை அடித்தபோது, அனைத்து வடிவிலான டி 20 கிரிக்கெட் போட்டிகளில் 13 ஆயிரம் ரன்களை கடந்தார், இதன் மூலம் டி 20 கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார் விராட் கோலி. விராட் கோலி நேற்று நடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியில், 42 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்தார். 403 ஆட்டங்களில் விளையாடிய விராட் கோலியின் மொத்த ரன்கள் 13,050 ஆகும். அதில் 9 சதங்கள் , 99 அரை சதங்கள் ஆகும். மேலும் டி -20 போட்டியில் அதிகபட்சமாக அவர் எடுத்த ஸ்கோர் 122* என்பது குறிப்பிடத்தக்கது. உலக அரங்கில் 13,000 ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.அதில் முதல் இடத்தில் கிறிஸ் கெய்ல் 14,562 ரன்கள் , இரண்டாம் இடத்தில் அலெக்ஸ் ஹேல்ஸ் 13,610 ரன்கள், மூன்றாம் இடத்தில் ஷோயிப் மாலிக் 13,557 ரன்கள், நான்காம் இடத்தில் கெய்ரன் பொலார்டு 13,537 ரன்கள் , ஐந்தாம் இடத்தில் விராட் கோலி 13,050 ரன்களை எடுத்துள்ளனர்.

