டில்லி மாநகராட்சியின் புதிய மேயராக ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓப்ராய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள்

டெல்லி மாநகராட்சிக்கு நடைபெற்ற மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் ஷெல்லி ஓபராய் மேயராக தேர்வு செய்யப்பட்டார். ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஓபராய் 150 வாக்குகள் பெற்றார். பாஜகவின் வேட்பாளர் ரேகா குப்தா 116 வாக்குகள் பெற்றதன் மூலம் ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓபராய் டெல்லி மாநகராட்சியின் புதிய மேயராக அறிவிக்கப்பட்டார். டெல்லி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இளம் பெண் ஷெல்லி ஓபராய், டெல்லி மாநகராட்சியின் 86வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார். 39 வயதான ஷெல்லி ஓபராய், இந்திய வர்த்தக கூட்டமைப்பின் (ஐசிஏ) வாழ்நாள் உறுப்பினராகவும் உள்ளார்.
வலுவான கல்விப் பின்னணி கொண்டுள்ளார். முதுகலைப் பட்டத்தை ஹிமாச்சலப் பிரதேச பல்கலைக்கழகத்தில் பயின்றார். பின்னர் டெல்லி இந்திரா காந்தி திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தின் மேலாண்மை படிப்புகள் பள்ளியில் தத்துவத் துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இத்தகைய கல்விப் பின்னணி கொண்டவர் கடந்த 2013ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். இந்நிலையில் தற்போது டெல்லி மாநகராட்சியின் மேயர் ஆகியிருக்கிறார்.
மேயர் தேர்தலும் வழக்கும்: டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 இடங்களுக்கு கடந்த டிசம்பரில் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி 134 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. பாஜக 104 இடங்களுடன் இரண்டாமிடம் பெற்றது. இந்நிலையில், மேயர் தேர்தலுக்கு முன் 10 நியமன உறுப்பினர்களை துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா நியமித்தார். டெல்லி மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பிப்.18-ல் பிறப்பித்த உத்தரவில், “மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது. மேயர் தேர்தலுக்கு பிறகு அவரது தலைமையிலான கூட்டத்தில் துணை மேயர் தேர்வு செய்யப்பட வேண்டும்” என்று கூறியது. தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்ததையடுத்து ஆளுநருக்கு தேர்தல் தேதியை அரசு பரிந்துரைக்க, ஆளுநரும் இசைவு தெரிவித்தார். அதன்படி இன்று தேர்தல் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *