மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் 2 நாள் தமிழக சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 19 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. மீதமுள்ள 20 தொகுதிகளில் பாஜக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் தமிழகத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 4, 5 ஆகிய 2 நாட்கள் தமிழகத்தில் அமித்ஷா பிரசாரம் செய்வதாக கூறப்பட்டது.
நாளை டெல்லியில் இருந்து தமிழகம் வரும் அமித்ஷா மதுரையில் இறங்குகிறார். அதன்பிறகு மதுரை, தேனி, சிவகங்கையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகவும், நாளை மறுநாள் (ஏப்ரல் 5ம் தேதி) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திடீரென்று அமித்ஷாவின் 2 நாள் தமிழக சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் அவரது பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதற்கு பதிலாக அமித்ஷா வேறுறொரு நாளில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அதன் விபரம் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

