காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உண்டியல் பணம் எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காஞ்சிபுரத்தில் பஞ்சபுத ஸ்தலங்களில் நிலம் ஸ்தலமாக ஏகாம்பரநாதர் கோயில் விளங்குகிறது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ராஜகோபுரம், மூலவர் அறை மற்றும் கோயில் பிரகாரங்கள் திருப்பணி பல கோடி ரூபாய் செலவில் நடந்து வருகிறது. இந்நிலையில் கோயில் நிர்வாகம் சார்பில், இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் கோயில் நுழைவு வாயில் முன்பு திருப்பணிக்காக உண்டியல் வைத்துள்ளனர். நேற்று ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் மாலை 6 மணியளவில் உண்டியலில் திடீரென கரும்புகை வந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள், உடனடியாக இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உண்டியலை திறந்து பார்த்தனர். அதற்குள் ஒரு தீக்குச்சி கிடந்தது. உண்டியலில் இருந்த பணத்தை வெளியே எடுத்து எண்ணி பார்த்தனர்.2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகள் தீயில் கருகி கிடந்தது. உடனடியாக உண்டியலை திறந்து அகற்றியதால் ரூ.99 ஆயிரத்து 918 ரூபாய் நோட்டுகள் காப்பாற்றப்பட்டன. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிவகாஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறன்றனர். உண்டியலில் மர்ம நபர்கள் தீக்குச்சியை கொளுத்தி போட்டார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் ஏகாம்பரநாதர் கோயில் பக்தர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

