செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் டீப்பேக் வீடியோக்கள் மற்றும் உள்ளடக்கங்கள், பல நேரங்களில் தனிநபர்கள் மற்றும் பொதுப் பயனர்களுக்கு தீங்கு விளைவிக்கும் போலியான தகவல்களை பரப்புகின்றன. இதைத் தடுக்க, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (IT Ministry) ஐடி விதிகளில் திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு திருத்த விதிகள் அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. புதிய திருத்த விதிகளின்படி, செயற்கையாக உருவாக்கப்பட்ட (டீப்பேக்) வீடியோக்கள் மற்றும் உள்ளடக்கங்கள் தெளிவாக அடையாளப்படுத்தப்பட வேண்டும்; அதாவது அவற்றில் “லேபிள்” மூலம் AI உருவாக்கியதென குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், மெட்டா போன்ற முக்கிய சமூக ஊடக தளங்கள், பயனர்கள் பதிவேற்றும் உள்ளடக்கங்கள் செயற்கையாக உருவாக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்தும் விதமாக உறுதிமொழி பெற வேண்டும். அதேசமயம், அந்த உறுதிமொழிகளை சரிபார்க்க தேவையான தொழில்நுட்ப வசதிகளையும் அமைத்திருக்க வேண்டும் என விதிகள் கூறுகின்றன. இந்த திருத்தங்கள், பயனர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது, போலியான உள்ளடக்கங்களை கண்டறியும் திறனை மேம்படுத்துவது, மற்றும் டிஜிட்டல் பொறுப்புணர்வை வலுப்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது. மேலும், இந்த வரைவு விதிகள் குறித்த கருத்துகளை பொதுமக்கள் நவம்பர் 6ம் தேதி வரை தெரிவிக்கலாம் என தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

