சவுதி அரேபியாவில் சுமார் 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த பழமைவாய்ந்த கஃபாலா அமைப்பு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 23 லட்சம் இந்தியர்கள் உட்பட மொத்தம் 1.3 கோடி வெளிநாட்டு தொழிலாளர்கள் பயன்பெறவுள்ளனர். 1950களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கஃபாலா முறை, வளைகுடா நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்காக குறைந்த விலையிலான புலம்பெயர் தொழிலாளர்களின் வருகையை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு தொழிலாளரும் ஒரு உள்ளூர் ஸ்பான்சர் அல்லது கஃபீலுடன் பிணைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் அனுமதி இல்லாமல் வேலை மாற்றம், நாட்டைவிட்டு வெளியேறும் அனுமதி அல்லது சட்ட உதவி பெறுதல் ஆகியவை சாத்தியமில்லை.
இந்த அமைப்பு நடைமுறையில் முதலாளிகளுக்கு தொழிலாளர்களின் மீது முழுமையான கட்டுப்பாட்டை வழங்கி, அடிமைத்தனத்துக்கு இணையான நிலையை உருவாக்கியது. சமீப ஆண்டுகளில், இந்த முறையில் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல்கள் அதிகரித்ததாக பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியிருந்தன. இதையடுத்து, இளவரசர் முகமது பின் சல்மான் முன்னெடுத்துள்ள “விஷன் 2030” திட்டத்தின் ஒரு பகுதியாக, சவுதி அரசு கஃபாலா முறையை ரத்து செய்யும் முடிவை எடுத்தது. தற்போது அது அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், இது தொழிலாளர் உரிமைகள் மற்றும் புலம்பெயர் நலனில் ஒரு வரலாற்று மைல்கல்லாக கருதப்படுகிறது. இந்த சீர்திருத்தத்தின் மூலம், 23 லட்சம் இந்தியர்களை உள்ளடக்கிய 1.3 கோடி வெளிநாட்டு தொழிலாளர்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

