இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கெல்லன்டை பதவி நீக்கம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. அவர், கெல்லன்டின் செயல்பாடுகள் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். இதற்கான விளக்கமாக, நெதன்யாகு கூறியுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த சில மாதங்களில் எனக்கு நம்பிக்கை இழந்துவிட்டது. எனவே, தற்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சரை பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் இஸ்ரேல் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.காசாவில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்ற போரில் 43,300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக காசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பெரும்பாலான பகுதிகள் இடிபாடுகளாக மாறிவிட்டன. அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலை தாக்கியதை தொடர்ந்து இந்த நிலைமை உருவாகியுள்ளது.இஸ்ரேல் தற்போது லெபனான் எல்லைக்குள் உள்ள ஈரானிய ஆதரவு கொண்ட ஹிஸ்புல்லாக்களை அழிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில், லெபனானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,002 ஆகவும், காயமடைந்தோர் எண்ணிக்கை 13,492 ஆகவும் பதிவாகியுள்ளது. காசா மற்றும் லெபனான் ஆகிய இரு முனைகளில் இஸ்ரேல் ராணுவம் முழுமையாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதுகாப்பு அமைச்சரை யோவ் கெல்லன்டை பிரதமர் பதவி நீக்கம் செய்துள்ளார். யோவ் கெல்லன்டுக்கு பதிலாக, தற்போது வெளியுறவுத் துறை அமைச்சராக உள்ள இஸ்ரேல் காட்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கிடியோன் சார் இஸ்ரேல் நாட்டின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பதவி நீக்கம் தொடர்பான தனது கருத்துக்களை யோவ் கெலான்ட் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, “இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது என் வாழ்வின் முக்கியமான கடமையாக இருந்தது, மேலும் இது தொடர்ந்தும் எனது முக்கிய நோக்கமாகவே இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், இஸ்ரேல் காசா மற்றும் லெபனான் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை நிறுத்தி, மத்தியக் கிழக்குப் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

