ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தைச் சேர்ந்த ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் பங்குகளை பொதுமக்களுக்கு வெளியிடுவதற்கான IPO திட்டத்திற்கு இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான SEBI ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய IPO-களில் ஒன்றாக ஜியோவின் IPO உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த IPO மூலம் சுமார் ரூ.37,000 முதல் ரூ.37,700 கோடி வரை நிதி திரட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் அதிகபட்சமாக 27 கோடி புதிய பங்குகளை வெளியிட உள்ளது. ஒவ்வொரு பங்கின் முகமதிப்பு ரூ.10 ஆகும். IPO-வின் இறுதி விலை Book Building முறையில் பின்னர் நிர்ணயிக்கப்படும். மேலும், இந்த IPO-வில் தற்போதைய பங்குதாரர்கள் தங்களுடைய பங்குகளை விற்பனை செய்யும் Offer for Sale (OFS) இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த IPO வெற்றிகரமாக வெளியானால், 2024-ல் ரூ.27,870 கோடி அளவில் IPO வெளியிட்ட ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் சாதனையை ஜியோ முறியடித்து, இந்தியாவின் மிகப்பெரிய IPO என்ற புதிய சாதனையை படைக்க வாய்ப்பு உள்ளது.ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் தொலைத்தொடர்பு மட்டுமின்றி டிஜிட்டல் சேவைகள், கிளவுட், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளிலும் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. உலகின் முன்னணி மொபைல் ஆபரேட்டர்களில் ஒன்றாக இருக்கும் ஜியோவுக்கு 53 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.IPO மூலம் திரட்டப்படும் நிதியில் ஒரு முக்கிய பகுதியை ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தின் ரூ.27,500 கோடி வரையிலான கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்த பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் நிறுவனத்தின் நிதி நிலையை மேலும் வலுப்படுத்தும் நோக்கமும் இந்த IPO-வில் இருப்பதாக கூறப்படுகிறது.மேலும், இந்த IPO ரிலையன்ஸ் குழுமத்திற்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு வரும் முக்கியமான பொதுப்பங்கு வெளியீடாகும். 2006-ல் ரிலையன்ஸ் பெட்ரோலியம் பட்டியலிடப்பட்ட பிறகு, ரிலையன்ஸ் குழுமத்திலிருந்து வெளியாகும் மிகப்பெரிய IPO-களில் இதுவும் ஒன்றாக இருக்கும். இதனால் ஜியோ IPO மீது இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

