இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசியான ‘கியூடெங்கா’ (Qdenga) தடுப்பூசியை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி, விநியோகம் செய்ய டாக்டர் ரெட்டீஸ் லேபரேட்டரீஸ் மற்றும் டாகேடா பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனங்கள் இணைந்து ஒப்பந்தம் செய்துள்ளன.இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியாவில் கியூடெங்கா தடுப்பூசியை சந்தைப்படுத்துதல் மற்றும் விநியோகம் செய்வதற்கான பணிகளை இரு நிறுவனங்களும் இணைந்து மேற்கொள்ள உள்ளன. இதற்காக மருத்துவ நிபுணர்களை ஒருங்கிணைத்தல், தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.கியூடெங்கா தடுப்பூசியை சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என தகுதியானவர்களுக்கு இந்தியாவின் தனியார் மருத்துவச் சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிறுவனங்களின் தகவலின்படி, 2027ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்த தடுப்பூசி இந்தியாவில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.இந்த தடுப்பூசியின் விலை இதுவரை இறுதி செய்யப்படவில்லை. முன்னதாக, 4 முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு கியூடெங்கா தடுப்பூசியை பயன்படுத்த, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த ஜூலை மாதம் சந்தைப்படுத்தல் அனுமதி வழங்கியிருந்தது.

