ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் தொடக்க விழா, ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த விளையாட்டுத் திருவிழாவில் 45 நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்டையில் இறங்குகின்றனர். 20வது ஆசிய விளையாட்டு போட்டித் தொடர் ஜப்பானின் அய்ச்சி மாகாணம் மற்றும் நகோயா, டோக்கியோ நகரங்களில் இன்று தொடங்கி அக்டோபர் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஜப்பான் 3வது முறையாக ஆசிய விளையாட்டு போட்டியை நடத்துவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 1958ல் டோக்கியோ மற்றும் 1994ல் ஹிரோஷிமா நகரில் இந்த தொடர் நடைபெற்றுள்ளது. இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஜப்பான், ஈரான், ஈராக் உள்பட மொத்தம் 45 நாடுகள் மற்றும் ஒரு அகதிகள் அணியும் முதல் முறையாக பங்கேற்கிறது.
அய்ச்சி – நகோயாவின் பலோமா மிஸுஹோ அரங்கில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2.30க்கு தொடங்கும் தொடக்க விழா, மாலை 4.30 வரை நடைபெற உள்ளது. ஜப்பானின் பிரபல திரைப்பட இயக்குனர் யூகிஹிகோ சுட்சுமி தொடக்க விழா கலைநிகழ்ச்சிகளை வடிவமைத்துள்ளார்.
தொடக்க விழா அணிவகுப்பில் தேசியக் கொடி ஏந்தி இந்தியக் குழுவினருக்கு தலைமை வகிக்கும் கவுரவம் துப்பாக்கிசுடுதல் வீராங்கனை மனு பாக்கர் மற்றும் குண்டு எறிதல் வீரர் தஜிந்தர்பால் சிங் தூருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டித் தொடருக்கான இந்திய குழுவில் 503 வீரர், வீராங்கனைகள் மற்றும் 246 அதிகாரிகள்/பயிற்சியாளர்கள் என மொத்தம் 768 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்தியா 36 வகை விளையாட்டு போட்டிகளில் பதக்க வேட்டை நடத்த உள்ளது. இந்திய குழுவின் தலைவராக சஹ்தேவ் யாதவ், தலைமை மருத்துவ அதிகாரியாக டாக்டர் தின்ஷா பர்திவாலா செயல்பட உள்ளனர்.
ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் புதிய விதிமுறையின் கீழ் ஒவ்வொரு குழுவிலும் ஒரு பாதுகாப்பு அதிகாரி இருப்பது கட்டாயம் என்பதால், முதல் முறையாக அந்த பதவிக்கு சாஃப்ட்பால் சங்கத் தலைவர் நீட்டல் நரங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வீராங்கனைகள் தங்களின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து தேவைகளுக்கும் இவரை அணுகலாம். ஆண்கள் ஈட்டி எறிதலில் இருந்து இந்திய நட்சத்திரம் நீரஜ் சோப்ரா காயம் காரணமாக விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற சாதனையாளர் யஷ்வீர் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.

