கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் விசாரணை தொடரும் நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் நடிகர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் விஜய் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது.இதற்கு முன்பு, கடந்த ஆண்டு நவம்பர் 25-ம் தேதி தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்டவர்கள் புதுடெல்லியில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர். அதேபோல், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் கே.பி. மதியழகன் மற்றும் எம்.சி. பவுன்ராஜ் உள்ளிட்டோர், கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி பல மணி நேரம் பதிலளித்தனர். இதன் தொடர்ச்சியாக, ஜனவரி 12-ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் விஜய் நேரில் ஆஜராக விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதிகாரிகள் கூறும் படி, விசாரணை முடிந்த பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணியும் சிபிஐ திட்டமிட்டுள்ளது.

