பெங்களூரு ஹோட்டல் குண்டு வெடிப்பில் தொடர்புடைய கர்நாடகா இளைஞர்கள் இரண்டு பேரின் அடையாளங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இருவரும் சென்னையில் தங்கியிருந்த தகவலும் கிடைத்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ‘ராமேஸ்வரம் கபே’ ஹோட்டலில் கடந்த 1ஆம் தேதி பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. குண்டு வெடிப்பில் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. ஹோட்டலுக்கு தொப்பி அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர் வெடிகுண்டை வைத்து சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டன. தொப்பி அணிந்து கொண்டு நடந்து செல்வதும், தொப்பியுடன் பேருந்தில் அமர்ந்து இருப்பதும் சிசிடிவி காட்சிகளில் தெளிவாக பதிவாகி இருந்தன. குண்டு வெடிப்பு சம்பவ விவகாரத்தில் தொப்பி முக்கிய துருப்புச் சீட்டாக போலீசாருக்கு இருந்தது.
குண்டு வைத்த நபர் அணிந்திருந்த தொப்பி, குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள கழிவறை ஒன்றில் கிடந்தது. அதை கைப்பற்றிய என்ஐஏ அதிகாரிகள் அதிலிருந்து விசாரணையை தொடங்கினர். தொப்பியில் இருந்த ஒரு குறியீட்டு நம்பரை வைத்து, அந்த தொப்பி சென்னையில் வாங்கப்பட்டு இருப்பதை கண்டறிந்தனர்.
சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் இருந்து தொப்பி வாங்கப்பட்டது தெரியவந்தது. சென்னையில் உள்ள குறிப்பிட்ட வணிக வளாகத்தில் போலீசார் விசாரணை நடத்த, தொப்பி அங்கு வாங்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
பெங்களூரு ஹோட்டலில் குண்டு வைத்தவர் அணிந்திருந்த தொப்பி சென்னையில் வாங்கப்பட்டிருப்பதும், குண்டு வைத்த இருவர் சென்னை திருவல்லிக்கேணி விடுதியில் தங்கி இருந்ததும் தெரியவந்துள்ளது. இதனால் குண்டு வைத்த குற்றவாளிகள் விரைவில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

