அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கல்வியாளர் ஐசரி கணேஷ் தாக்கல் செய்த மனு பின்னர் வாபஸ் பெறப்பட்டது.திருவள்ளூரில் உள்ள தனது மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி பெறுவதற்காக, கடந்த 2020 ஆம் ஆண்டு முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு லஞ்சம் வழங்கியதாக கல்வியாளர் ஐசரி கணேஷ் மற்றும் முன்னாள் அமைச்சர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.இந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறையும் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் தனியாக விசாரணையைத் தொடங்கி வழக்குப்பதிவு செய்தது. இதனை ரத்து செய்யக் கோரி ஐசரி கணேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.அவரது மனுவில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அரசு மருத்துவர் பாலாஜிநாத் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்புத் துறை, விசாரணையில் குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்து, வழக்கை முடித்து வைத்து ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.எனவே, முடித்து வைக்கப்பட்ட அந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று ஐசரி கணேஷ் தரப்பில் வாதிடப்பட்டது.இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த அறிக்கையை விசாரணை நீதிமன்றம் இதுவரை ஏற்றுக்கொண்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்பது நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

