இந்திய ரயில்வேயின் வடமாநிலங்களில் உள்ள 10 முக்கிய ரயில்வே மண்டலங்களில் கடந்த சில ஆண்டுகளில் அதிகளவிலான திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஏசி ரயில் பெட்டிகளில் பயணிகளுக்காக வழங்கப்படும் படுக்கை விரிப்புகள், போர்வைகள், துண்டுகள் மற்றும் தலையணைகள் அதிக அளவில் காணாமல் போயுள்ளன.ரயில்வே அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.104 கோடி மதிப்பிலான படுக்கை விரிப்புகள் மற்றும் தொடர்புடைய பொருட்கள் திருடப்பட்டுள்ளன. மேலும், ஏசி பெட்டிகளில் இருந்து சுமார் 1.27 கோடி பெட்ஷீட்டுகள், போர்வைகள் மற்றும் துண்டுகள் மாயமானதாக கூறப்படுகிறது.இந்த பொருட்களை பெரும்பாலும் சில பயணிகளே எடுத்துச் செல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்திய ரயில்வேக்கு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.இதுபோன்ற திருட்டுகளை தடுக்க, ரயில்வே நிர்வாகம் புதிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. ஏசி பெட்டிகளில் சிசிடிவி கண்காணிப்பு வசதிகளை அதிகரிப்பது, பயணிகள் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் பரிசீலனையில் உள்ளன.

