தமிழ்நாட்டில் பைக் டாக்சி சேவைக்கு தற்போதைக்கு அனுமதி இல்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. பைக் டாக்சி சேவையை அனுமதிப்பது குறித்து அரசு குழு அமைத்து கொள்கை முடிவு எடுக்கும் வரை இந்த நிலை தொடரும் என்றும், விதிகளை மீறி பைக் டாக்சி இயக்கினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.சென்னையில் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கிய பைக் டாக்சி சேவை, தற்போது தமிழகத்தின் பல முக்கிய நகரங்களில் செயலிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடிவதால் பொதுமக்களிடம் வரவேற்பு இருந்தாலும், ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுநர்களின் வருமானம் பாதிக்கப்படுவதாக எதிர்ப்பும் உள்ளது.பைக் டாக்சி சேவையை முறைப்படுத்தி, உரிய விதிகளுடன் இயக்க அனுமதிக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த நவீன் குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பைக் டாக்சி சேவைக்கு அனுமதி வழங்குவது குறித்து தமிழக அரசு விரைவில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.இதையடுத்து, கொள்கை முடிவு எடுக்கப்படும் வரை தமிழகத்தில் பைக் டாக்சி சேவைக்கு அனுமதி இல்லை என்றும், மீறி இயக்கினால் நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

