ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.13,430 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.பல்வேறு முக்கிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி ஆந்திர மாநிலத்துக்கு வருகை தந்தார். கர்னூல் மாவட்டத்தில் விமானம் மூலம் வந்திறங்கிய அவரை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஆளுநர் அப்துல் நசீர் ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர்.பின்னர் பிரதமர் மோடி ஸ்ரீசைலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பிரம்மாரம்ப மல்லிகார்ஜுன சுவாமி கோவிலுக்கு சென்றார். ஜோதிர்லிங்கமும் சக்தி பீடமும் ஒரே இடத்தில் அமைந்துள்ளதும், இந்த கோவிலின் சிறப்பு அம்சமாகும். அங்கு பிரதமர் மோடி ருத்ராபிஷேக பூஜை செய்து வழிபாடு செய்தார். அவருடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதன் பின் அவர் சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திரா சென்றார். பின்னர் கர்னூல் மாவட்டத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ள ரூ.13,430 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்.இந்த திட்டங்கள் தொழில்துறை, மின்சாரம், சாலை, ரயில்வே, பாதுகாப்பு உற்பத்தி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற துறைகளை உள்ளடக்கியவை ஆகும்.
 
	

 
						 
						