புதிய போப் 14ம் லியோ, வரும் மே 18ம் தேதி நடைபெறும் திருப்பலியில் பதவி ஏற்க உள்ளார் என வாடிகன் நிர்வாகம் அறிவித்துள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 21ம் தேதி காலமானார். புதிய போப்பை தேர்வு செய்ய, கடந்த 7ம் தேதி 133 கத்தோலிக்க கர்தினால்கள் கலந்து கொண்ட ரகசிய கூட்டம் நடைபெற்றது. புதிய போப்பை தேர்வு செய்ய, ரகசிய வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பங்கு கர்தினால்களின் ஆதரவு தேவை. நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற வாக்கெடுப்பில், அமெரிக்காவை சேர்ந்த கர்தினால் ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் போப் 14ம் லியோ என அழைக்கப்படுவார் என கர்தினால்கள் அறிவித்துள்ளனர். இதற்கான திருப்பலி மே 18ம் தேதி நடைபெறவுள்ளது, இதில் போப் 14ம் லியோ தனது பதவியை ஏற்க உள்ளார். இதனை தொடர்ந்து, 21ம் தேதி நடைபெறும் முதல் திருப்பலியில் போப் 14ம் லியோ தலைமை வகிக்கவுள்ளதாகவும் வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

