போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதியின் மறுகட்டமைப்பு மற்றும் அமைதி நடவடிக்கைகளுக்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ள ‘காசா அமைதி வாரியத்தில்’ இணைய 22 நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன. இதற்கிடையில், சில ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளும் இந்த வாரியத்தில் சேர தயக்கம் காட்டி வருகின்றன. இந்தியாவும் இந்த அமைதி வாரியத்திற்கான கையெழுத்து நிகழ்வில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளது. டிரம்ப் நடத்திய மத்தியஸ்தத்தின் மூலம் இஸ்ரேல்–ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதையடுத்து, அதன் இரண்டாம் கட்டமாக இந்த அமைதி வாரியம் அமைக்கப்படும் என அவர் அறிவித்திருந்தார்.இந்த சர்வதேச அமைதி வாரியம், காசாவில் போர் நிறுத்தம் சரியாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதுடன், போர் காரணமாக சேதமடைந்த பகுதிகளில் மறுகட்டமைப்பு பணிகளையும் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இணையும் ஒவ்வொரு நாடும் சுமார் ரூ.9,000 கோடி நிதி வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தொடக்கத்தில் காசா மறுகட்டமைப்புக்காக மட்டுமே இந்த வாரியம் செயல்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் எதிர்கால உலகளாவிய போர் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் அமைப்பாக இது செயல்படும் என கூறப்பட்டதால் பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் ஐநாவுக்கு மாற்றாக அமெரிக்கா தலைமையில் புதிய அமைப்பை உருவாக்க டிரம்ப் முயற்சி செய்கிறார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனிடையே, சுவிட்சர்லாந்தின் டாவோசில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற கூட்டத்தின் போது, அதிபர் டிரம்ப் முன்னிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்ட 22 நாடுகளின் தலைவர்கள் இந்த காசா அமைதி வாரியத்தில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

