ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) புஜைரா பகுதியில் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் 4 இந்தியர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 பேர் காயமடைந்துள்ளனர்.ஷேக் கலீஃபா சாலையில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சாலையில் போக்குவரத்து மெதுவாகச் சென்றுகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற வாகனங்கள் மீது மோதியுள்ளது. இதனால் அடுத்தடுத்து பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் மொத்தம் 23 வாகனங்கள் சிக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 18 கார்கள் மற்றும் 5 லாரிகள் அடங்கும். லாரி கவிழ்ந்து தீப்பிடித்ததால், தீ மற்ற வாகனங்களுக்கும் பரவியது.உயிரிழந்தவர்களில் 10 பேர் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்தவர்கள், 4 பேர் இந்தியர்கள் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.காயமடைந்த 30 பேரில் 7 இந்தியர்களும் அடங்குவர். மேலும், 15 பேர் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.இந்த விபத்து குறித்து UAE அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கான காரணம், லாரியின் தொழில்நுட்ப நிலை மற்றும் ஓட்டுநரின் தவறு உள்ளிட்ட அம்சங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வாகன ஓட்டிகள் வேகக் கட்டுப்பாட்டைப் பின்பற்ற வேண்டும் என்றும், முன்னால் செல்லும் வாகனங்களுடன் போதிய இடைவெளி விட்டு பாதுகாப்பாகப் பயணிக்க வேண்டும் என்றும் UAE அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
