பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

சிறப்பு சினிமா செய்திகள் தமிழ்நாடு

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி வயது முதிர்வால் ஜூலை 14- ஆம் தேதி பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 87. கர்நாடகாவில் பிறந்து தமிழ் திரையுலகில் கோலோச்சிய சரோஜா தேவி, 1938- ஆம் ஆண்டு ஜனவரி 07- ஆம் தேதி கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த காவல் அதிகாரி ஜாவர் பைரப்பா- ருத்ரம்மா தம்பதிக்கு 4ஆவது மகளாக பிறந்தார். இவருக்கு சரஸ்வதிதேவி, பாமாதேவி, சீதாதேவி ஆகிய 3 அக்காவும், வசந்தாதேவி என்ற ஒரு தங்கையும் உள்ளனா். அபிநய சரஸ்வதி என்று அழைக்கப்பட்ட சரோஜா தேவியின் இயற்பெயர் ராதாதேவி. திரையுலகில் சரோஜா தேவி , 1958- ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார், தனது இயல்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். எம்ஜிஆருடன் 26 படங்கள், சிவாஜியுடன் 22, ஜெமினியுடன் 17 படங்களில் நடித்துள்ளார். 60 ஆண்டுக்கு மேலாக தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200- க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சரோஜா தேவி. நாடோடி மன்னன், அன்பே வா, ஆலயமணி, கல்யாண பரிசு, நாடோடி, நான் ஆணையிட்டால், அரச கட்டளை, படகோட்டி, பாசம், பாலும் பழமும், தேனும் பாலும் போன்ற படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் கோலோச்சியவர். கடந்த 1960- 1970 ஆம் ஆண்டுகளில் தமிழ் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் ஆட்சி செய்தவர். ‘அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி’ என ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் சரோஜா தேவி. நடிப்பு மட்டுமின்றி நடனத்திலும் தனக்கென்று தனி முத்திரையை பதித்தவர். கடந்த 1969- ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை வழங்கி நடிகை சரோஜா தேவியை கௌரவித்த இந்திய அரசு, கடந்த 1992- ஆம் ஆண்டு பத்ம பூஷண், 2008- ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் தேசிய விருதையும் வழங்கியது. அதுமட்டுமில்லாமல் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநில அரசு விருதுகளையும் பெற்றுள்ளார். நடிகை சரோஜா தேவியின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் ,அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என பலரும்தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *