இந்திய துணைக் குடியரசுத் தலைவராக பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர், கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி, தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து புதிய துணைக் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த செப்டம்பர் 9-ந் தேதி நடைபெற்றது. இதில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெற்று துணைக் குடியரசுத் தலைவராக பெறுப்பேற்றார்.
இந்த நிலையில் துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தனது முதல் வெளிநாட்டு பயணமாக செஷல்ஸ் நாட்டுக்கு செல்கிறார்.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி செஸல்ஸ் நாட்டின் அதிபராக பேட்ரிக் ஹெர்மெனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரது பதவியேற்பு விழாவில் இந்திய அரசு சார்பாக குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொள்வார் என்றும் இதற்காக வரும் அக்டோபர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் அரசு முறை பயணமாக செசல்ஸ் நாட்டிற்கு செல்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின் போது செசல்ஸ் நாட்டின் அதிபர் பேட்டரிகை சந்திக்கும் குடியரசுத் துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், இந்தியா சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பார் என்றும் இரண்டு நாடுகள் இடையிலான நீடித்த நல்லுறவு குறித்தும் விவாதிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

