விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, அதிமுகவில் இருந்து விலகிய சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்டோர் இன்று பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்டோருக்கு முக்கிய பதவிகள் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், அவர்களுக்கான பொறுப்புகளை அறிவித்து தவெக தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர், “ஆதவ் அர்ஜுனா – தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச்செயலாளர், சி.டி.ஆர். நிர்மல் குமார் – துணைப் பொதுச்செயலாளர் (தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு), ஜெகதீஷ் – தலைமைக் கழக இணைப் பொருளாளர், A.ராஜ்மோகன் – கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளர், லயோலா மணி (எ) A.மணிகண்டன் – கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர், பேராசிரியர் சம்பத்குமார் – கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் உள்ளிட்ட 19 நபர்களுக்கான பொறுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட பொறுப்புகளில் நியமிக்கப்படுபவர்கள் அனைவரும் எனது உத்தரவு மற்றும் ஆலோசனைக்கிணங்க, கழகப் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வழிகாட்டுதலின்படி கழகப் பணிகளை மேற்கொள்வார்கள். கழகத் தோழர்களும், அனைத்து நிலை நிர்வாகிகளும் புதிய பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பை நல்கி, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கானக் கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா, என்னுடைய அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியுடன் இணைந்து, அவரது அரசியல் வியூகங்களைப் பின்பற்றி, தேர்தல் பிரசாரங்களை வடிவமைத்து, தேர்தல் மேலாண்மைப் பணிகளை மேற்கொள்வார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
