மக்கள் நீதி மய்யம் – மக்களின் ஆதரவைப் பெறுமா?

செய்திகள்

மாற்று அரசியல் , மக்களுக்கான அரசியல், திராவிடக் கட்சிகளின் மாற்று என்று வாய்கிழிய பேசிவரும் பல கட்சிகளில் நடிகர் கமலஹாசன் துவங்கிய “ம.நீ.ம”விற்க்கு முக்கிய பங்கு இருக்கிறது.

கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு அந்த கட்சி , மிகக் குறைந்த சதவீத வாக்குகளைப் பெற்றது.

இதனால் நடிகர் கமலஹாசன் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளானார். அவருக்கு என்ன அவர் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கிளம்பி விடுவார் என்று நக்கல் அடித்தனர்.

ஆனால் அதைப் பற்றியெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாத நடிகர் கமலஹாசன் வருகின்ற சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார். சினிமா ஷூட்டிங்கில் சிறிது உடல்நிலை கோளாறு ஏற்பட்டவுடன் அவர் வீடியோ வாயிலாக மக்களை சந்தித்து பேசி வருகிறார்.

நடிகராக இருந்தால் மட்டும் போதுமா?

நான் நடிகன் , எனது கண்களின் அசைவினால் ஓட்டுகளை அள்ளி விடுவேன் என்றும் கூறியிருக்கிறார் கமல்.

ஆண்டவரே நீங்க வாயால பேசினாலே பல பேருக்கு புரிய மாட்டேங்குது இதுல நயன பாஷை தேவையா? என்றும் மீம் போட்டு வருகிறார்கள்.

ஒரு காலகட்டத்தில் அரசியலில் அனுபவம் இருக்கிறதோ, இல்லையோ மிகப் பிரபலமான ஒருவர் போட்டி போடுவதாக இருந்தால் மக்கள் கண்ணை மூடிக்கொண்டு வாக்களித்து வந்தனர்.

ஆனால் அந்த நிலைமை இன்று அறவே இல்லை ! யார் யார் போட்டி போடுகிறார்கள், அவர்கள் இதற்கு முன்னால் என்ன செய்திருக்கிறார்கள் என்று ஆராயும் கூட்டம் இப்போது பெருகி விட்டது.

அதனால் படித்தவர்கள் மற்றும் நடுநிலை மக்களின் நம்பிக்கையை பெற நடிகர் கமலஹாசன் அவரது கட்சியில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் , ஐபிஎஸ் அதிகாரிகள் என்று பலரையும் சேர்த்து வந்தார்.

அதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் ஆலோசகர் பொன்ராஜ் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னால் அவர் கொடுத்த பேட்டியில் திரு.அப்துல் கலாம் அவர்களும் கமலஹாசனும் பலமுறை சந்தித்து பேசி இருக்கிறார்கள். அப்போதெல்லாம் அப்துல் கலாம் அவர்கள் கமலஹாசனை கட்சி துவங்க அறிவுறுத்தியதாக கூறியிருக்கிறார்.

இந்த பேச்சு பெரும் சர்ச்சைக்கும், கேலிக்கும் கிண்டலுக்கும் வழிவகுத்திருக்கிறது என்றாலும் கமலஹாசனின் அடுத்தடுத்த நகர்வுகள் பலரை சற்று யோசிக்கத்தான் வைக்கிறது.

நடிகர் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியின் ஆதரவு கமலஹாசன் கட்சிக்கு இருக்கிறது என்றும் கமலஹாசன் தான் எங்கள் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் என்றும் சில தினங்களுக்கு முன் அறிவித்திருக்கிறார்.

இதெல்லாம் மிக சிறிய அளவிலான நகர்வுகள் தான் என்றாலும் மேலும் பலர் எங்கள் கட்சியில் இணைய இருக்கிறார்கள் அப்போது எங்கள் கட்சியின் உண்மையான பலம் உங்கள் அனைவருக்கும் தெரியவரும் என்று கூறி சினிமா பாணியில் சிரித்து வருகிறார் கமலஹாசன்.

சா.ரா

Leave a Reply

Your email address will not be published.