இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த ஆண்டு நடைபெற்ற “ஆபரேஷன் சிந்தூர்” ராணுவ மோதலின் போது, பாகிஸ்தானுக்கு தொழில்நுட்ப உதவி வழங்கியதாக சீனா முதன்முறையாக மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளது. 2025 ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது. இந்த நிலையில் சீனாவின் விமான ஆராய்ச்சி நிறுவன பொறியாளர் ஜாங் ஹெங் அளித்த பேட்டியில், பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட சீன ஆயுதங்கள் முழுத் திறனுடன் செயல்படுவதை உறுதி செய்வதே தங்களின் பணியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.சீனாவின் மேம்பட்ட போர் விமானங்கள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பங்களை உருவாக்கும் AVIC நிறுவனத்துடன் இணைந்த குழுவில் தான் பணியாற்றியதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் பாகிஸ்தானுக்கு சீனா நேரடியாக ராணுவ தொழில்நுட்ப ஆதரவு வழங்கிய விவகம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. இந்திய ராணுவமும் ஏற்கனவே, பாகிஸ்தானின் பெரும்பாலான ராணுவ உபகரணங்கள் சீன தயாரிப்புகள் என்றும், சீனா தனது ஆயுதங்களை சோதிக்கும் களமாக பாகிஸ்தானை பயன்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தது. மேலும் ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு சீனா மற்றும் துருக்கி ஆதரவாக இருந்ததாக இந்திய ராணுவ அதிகாரிகள் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

