இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 போட்டியான ஐ.பி.எல் 18வது சீசன் இந்த மாதம் தொடங்கவுள்ளது. 10 அணிகள் இதில் பங்கேற்கின்றன, மற்றும் இந்த தொடரின் முதல் போட்டி மார்ச் மாதம் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் போட்டியில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகளில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி மட்டும் இதுவரை கேப்டனை அறிவிக்காத அணியாக இருந்தது. கடந்த சீசனில் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட்,, நடைபெற்ற மெகா ஏலத்தில் லக்னோ சூப்பர் கெய்ன்ட்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்ட விக்கெட் கீப்பரான லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் கேப்டன்ஷிப்பை ஏற்க மறுத்ததாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார் என அதிகாரபூர்வமாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது.

