மேற்கு வங்கத்தில் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது; பிரதமர் மோடி பங்கேற்றார்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

மேற்கு வங்காள மாநிலத்தில் மொத்தம் 294 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 207 இடங்களில் வெற்றி பெற்று முதன் முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான திருணாமூல் காங்கிரஸ் கட்சி 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மேற்கு வங்கத்தில் சுமார் 15 ஆண்டுகளாக நடைபெற்று வரும் திருணாமூல் காங்கிரஸின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
இதையடுத்து பாஜகவின் சட்டமன்ற குழு தலைவராக சுவேந்து அதிகாரி அக்கட்சியின் எம்.எல்.ஏக்களால் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஆட்சி அமைக்க சுவேந்து அதிகாரி உரிமை கோரினார். இதன் பின்னர் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த நிலையில், இன்று மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்.
கொல்கத்தாவில் உள்ள படைவீரர் அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சுவேந்து அதிகாரி தலைமையிலான அரசு பதவியேற்றது. அப்போது சுவேந்து அதிகாரி மற்றும் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதன் காரணமாக கொல்கத்தாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *