எழுத்தாளர், திரைப்பட உதவி இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் சிங்கப்பூர் தொழிலதிபராக பல துறைகளில் சாதனை படைத்த மா. அன்பழகன் அவர்கள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சிங்கப்பூரில் காலமானார். அவரது விருப்பப்படி, அவரது உடல் சிங்கப்பூர் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கல்வி மற்றும் ஆய்வுக்காக தானமாக வழங்கப்பட்டது. அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு பெரிய இழப்பாக கருதப்படுகிறது. இதனை முன்னிட்டு, ‘முதல் மொழி’, ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ மற்றும் ‘உமறுப்புலவர் வாரிசுகள் இலக்கிய அறக்கட்டளை’ ஆகிய அமைப்புகள் இணைந்து, ஏப்ரல் 26ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸ் பிரபஞ்சன் அரங்கத்தில் புகழஞ்சலி கூட்டம் நடத்தின. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும், அன்பழகன் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. முதல் மொழி அறக்கட்டளையின் செயலாளர் அ. அன்பழகன் அவர்கள் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, அனைவரையும் வரவேற்றார். முதல் மொழி அமைப்பின் தலைவர் சிவ இளநகை அவர்கள், அன்பழகன் அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அறிவியல் சிறுகதை போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
டிஸ்கவரி புக் பேலஸ் உரிமையாளர் மு. வேடியப்பன் அவர்கள், இனி ஆண்டுதோறும் இந்த நினைவு நிகழ்வுகளை இணைந்து நடத்துவோம் என்று கூறினார். இந்த கூட்டத்தில் எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர்கள் ராசி அழகப்பன், கீரா ஆகியோர் கலந்து கொண்டு அன்பழகன் அவர்களைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்தனர். மேலும், அவரது குடும்பத்தினரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கவிஞர் வைரமுத்துவின் உதவியாளர் பாஸ்கர், விழிகள் பதிப்பகத்தின் நடராஜன் மற்றும் தாமோதரன் ஆகியோரும் கலந்து கொண்டு தங்களின் அனுபவங்களை பகிர்ந்தனர். நிகழ்ச்சி முடிவில், உமறுப்புலவர் வாரிசுகள் இலக்கிய அறக்கட்டளையின் தலைவர் அஹமது ரூமைஸ்தீன் மற்றும் மருத்துவர் கனகலட்சிமி ஆகியோர் கலந்து கொண்டு அன்பழகன் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

