போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய கோரிக்கை முன்வைத்த ஈரான்

அமெரிக்கா உலகம் செய்திகள் பாகிஸ்தான் போர் முதன்மை செய்தி

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தன. கடந்த வாரம் பாகிஸ்தானில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. ஈரான் குழுவினர் இஸ்லாமாபாத்திற்கு சென்றிருந்தாலும், அமெரிக்க குழு தங்களது பயணத்தை ரத்து செய்தது. இதனால், பாகிஸ்தான் மத்தியஸ்த குழுவின் மூலம் ஈரான் ஒரு புதிய வரைவு திட்டத்தை வழங்கியுள்ளது. இந்த தகவலை அமெரிக்க செய்தி நிறுவனம் ஆக்சியோஸ் வெளியிட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தில், ஈரான் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. முதலில், போர் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், ஈரான் மற்றும் லெபனான் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படக்கூடாது என்றும் கூறியுள்ளது.

இரண்டாவது கட்டமாக, அமெரிக்க படைகள் பின்வாங்க வேண்டும். மேலும், ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டு, கடல் போக்குவரத்து வழக்கம் போல் நடைபெற வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த இரண்டு நிலைகளும் நிறைவேற்றப்பட்ட பிறகு தான், அணு ஆயுத உற்பத்தியை நிறுத்துவது குறித்து அமெரிக்காவுடன் பேச தயாராக இருப்பதாக ஈரான் கூறியுள்ளது. ஆனால், ஈரான் அணு ஆயுத உற்பத்தியை முழுமையாக நிறுத்த வேண்டும் என்றே அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால், ஈரானின் இந்த புதிய கோரிக்கையை அமெரிக்கா ஏற்குமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. முன்னதாக, “ஈரான் நேரடியாக எங்களுடன் பேசலாம், பாதுகாப்பாக தொடர்பு கொள்ள எங்களிடம் வசதி உள்ளது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். இருப்பினும், தற்போது பாகிஸ்தான் மூலமாகவே இந்த புதிய திட்டம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், அடுத்த கட்ட முடிவு என்னவாக இருக்கும் என்று உலக நாடுகள் கவனித்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *