ஈரான் மீது ஏற்பட்ட போரின் காரணமாக பல நாடுகளுக்கு எரிபொருள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து எரிபொருள் கொண்டு செல்லப்படும் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தற்காலிகமாக மூடியதால் இந்த சிக்கல் ஏற்பட்டது. ஆனால் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு தற்போது அந்த ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எரிபொருள் கப்பல்கள் மீண்டும் பயணம் செய்ய ஆரம்பித்துள்ளன. ஏற்கனவே ஈரானின் அனுமதியுடன் 2 கப்பல்கள் இந்தியா வந்தடைந்தன. அவற்றிலிருந்து சுமார் 97 ஆயிரம் டன் எரிபொருள் இறக்கப்பட்டது. இந்த நிலையில் மேலும் 22 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா நோக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் 20 கப்பல்கள் எரிபொருள் ஏற்றி வருகின்றன. இந்த கப்பல்கள் மூலம் சுமார் 2.15 லட்சம் டன் எல்.என்.ஜி., 3.21 லட்சம் டன் எல்.பி.ஜி. மற்றும் 16.76 லட்சம் டன் கச்சா எண்ணெய் கொண்டு வரப்படுகிறது. மேலும், இந்த 20 கப்பல்களில் 10 கப்பல்கள் இந்தியக் கொடியை கொண்டவை. மற்ற கப்பல்கள் மார்ஷல் தீவுகள், லைபீரியா, கிரீஸ், மால்டா மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளின் கொடிகளை ஏந்தியுள்ளன. இதற்கிடையே இந்திய கொடியை கொண்ட 2 கொள்கலன் கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணம் செய்து வருகின்றன.

