ஹரியானா மாநிலத்தில் கடந்த 6 ஆண்டுகளில் மாரடைப்பு காரணமாக 17,973 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சட்டமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மரணங்களில் பெரும்பாலானவர்கள் 18 முதல் 45 வயதுக்குள் உள்ள இளைஞர்களாக இருப்பது கவலைக்கிடமான விஷயமாக பார்க்கப்படுகிறது.அரசின் புள்ளிவிவரங்களின்படி, 2020-ல் 2,394 பேர், 2021-ல் 3,188 பேர், 2022-ல் 2,796 பேர், 2023-ல் 2,886 பேர், 2024-ல் 3,063 பேர், 2025-ல் 3,255 பேர் உயிரிழந்துள்ளனர். 2026 ஜனவரி மாதத்தில் மட்டும் 391 மரணங்கள் பதிவாகியுள்ளது. இதனால் 2020 ஜனவரி முதல் 2026 ஜனவரி வரை மொத்தம் 17,973 இளம் வயதினர் மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்பால் உயிரிழந்துள்ளனர்.
இளம் வயதில் மாரடைப்பு அதிகரித்து வருவதற்கு மாறிவரும் வாழ்க்கை முறை, அதிகமான மன அழுத்தம், தவறான உணவுப் பழக்கம், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், உடற்பயிற்சி இல்லாமை மற்றும் உடல் பருமனும் இதற்குக் காரணமாகும் என தெரிவிக்கப்படுகிறது.இதய நோய்களைத் தவிர்க்க, ஆரம்ப கட்டத்திலேயே பரிசோதனை செய்து கண்டறிவது முக்கியம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் தங்களின் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அளவுகளை சரியாக கண்காணிக்க வேண்டும். அதேபோல், ஆரோக்கியமான உணவு முறையுடன் தினசரி உடற்பயிற்சி செய்வதும் அவசியம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

