பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சி மூலம் அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
107 ஆவது மனதில் குரல் நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி பேசியதாவது. சமீபத்தில் பண்டிகைகளின்போது சுமார் ரூ.4 லட்சம் கோடி வர்த்தகம் நடந்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதில் மக்கள் இடையே மிகுந்த உற்சாகம் காணப்படுகிறது.
கையில் இருந்து பணம் கொடுக்காமல் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ளுங்கள். ஒரு மாதத்திற்கு நீங்கள் டிஜிட்டல் மூலமாக மட்டுமே பணம் செலுத்துங்கள். ஒரு மாதத்திற்கு பிறகு உங்கள் அனுபவங்களையும், புகைப்படங்களையும் என்னுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
தீபாவளி பண்டிகையின்போது பெரிதளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் இல்லாமல் நாட்டுக்குள்ளே இந்தியர்கள் திருமண கொண்டாட்டங்களை மேற்கொள்ள வேண்டும். 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று நீர் பாதுகாப்பாகும். நாம் அனைவரும் சேர்ந்து மக்களின் கடமைகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் நாட்டை வளர்ச்சி அடைய செய்வதற்கான உறுதியை நிச்சயம் நிறை வேற்றுவோம்.
நவம்பர் 26-ஆம் தேதியை நாம் ஒருபோதும் மறக்க இயலாது. இந்த நாளில் தான் நாட்டில் மிக கொடூரமான பயங்கரவாத தாக்குதல் நடந்தது. பயங்கரவாதிகள் மும்பையில் நடத்திய இந்த தாக்குதல் நாடு முழுவதையும் உலுக்கி விட்டது. இதில் உயிரிழந்த அனைத்து மக்களுக்கும் எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலின்போது உயிர் தியாகம் செய்த அந்த துணிச்சலான இதயங்களை நாடு இன்று நினைவு கூர்கிறது.
இன்னொரு காரணத்திற்காக இந்த நாள் முக்கியமானது. 1949-ல் அரசியலமைப்பு சபை இந்த நாளில் இந்திய அரசியல் அமைப்பை ஏற்றுக்கொண்டது. 2015-ல் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளை கொண்டாடும் போது நவம்பர் 26-ந் தேதியை அரசியலமைப்பு தினமாக கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் வந்தது எனக்கு நினைவிருக்கிறது. அரசியலமைப்பு தினத்தில் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

