தமிழகத்தின் 17வது சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அர்லேகர் உரையுடன் தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் காலை 9.30 மணி முதலே பேரவை வளாகத்திற்கு வருகை தந்தனர்.எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காலை 9.55 மணியளவில் சட்டப்பேரவைக்கு வந்தார். அப்போது திமுக உறுப்பினர்கள் மேஜைகளைத் தட்டி அவருக்கு வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து காலை 9.57 மணிக்கு முதலமைச்சர் விஜய் பேரவைக்கு வந்தார். அவர் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் மரியாதையுடன் வணக்கம் தெரிவித்தார்.இதற்கு முன்பாக காலை 9.52 மணிக்கு தமிழக ஆளுநர் அர்லேகர் தலைமைச் செயலக வளாகத்திற்கு வந்தார். அவரை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் சட்டமன்ற செயலாளர் சாந்தி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் போலீஸ் இசைக்குழுவின் வரவேற்பு இசையுடன் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையையும் ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.காலை 9.59 மணிக்கு பேரவை அரங்கிற்குள் நுழைந்த ஆளுநர், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார். சரியாக 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து, “வணக்கம்” என்று தமிழில் தொடங்கி தனது உரையை ஆங்கிலத்தில் வாசித்தார்.ஆளுநரின் ஆங்கில உரை காலை 10.39 மணிக்கு நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வாசித்தார். தமிழ் உரை காலை 11.10 மணிக்கு நிறைவடைந்தது. பின்னர் மீண்டும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு, முதல் நாள் சட்டப்பேரவை கூட்டம் காலை 11.11 மணிக்கு முடிவடைந்தது.மொத்தமாக இந்த அமர்வு 1 மணி நேரம் 11 நிமிடங்கள் நடைபெற்றது.
கூட்டம் நிறைவடைந்த பிறகு ஆளுநர் அர்லேகர், முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேரவையில் இருந்து புறப்பட்டார்.பின்னர் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஆளுநருக்கு தேநீர் விருந்து வழங்கி கவுரவித்தார். அதன்பின் ஆளுநர் தலைமைச் செயலகத்தில் இருந்து கிண்டி ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார்.இந்த முதல் நாள் கூட்டத் தொடர் தமிழக அரசின் முக்கிய கொள்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தும் வகையில் அமைந்தது. வரவிருக்கும் நாட்களில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் மற்றும் மக்கள் நலன் தொடர்பான விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

