அமெரிக்கா – ஈரான் இடையேயான அமைதிக்கு கேரண்டி கொடுத்த பாகிஸ்தான்!!

செய்திகள்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நீண்டகால பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வரும் முக்கியமான அமைதி ஒப்பந்தத்தில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மத்தியஸ்தராகவும் உத்தரவாதம் அளிக்கும் நபராகவும் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆகியோரின் கையொப்பங்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வரும் என்றும் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.ஒப்பந்தத்தின் முதல் கட்டமாக, உலக வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் உடனடியாக திறக்கும் என்றும், அதற்கு பதிலாக ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்திருந்த கடற்படை முற்றுகையை உடனடியாக நீக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டணிக்கும் ஈரானுக்கும் இடையே 100 நாட்களுக்கும் மேலாக நீடித்ததாக கூறப்படும் மோதல், இந்த ஒப்பந்தத்தின் மூலம் நிரந்தரமாக முடிவுக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததுடன், எரிபொருள் விலை உயர்வு, பணவீக்கம் மற்றும் உலக பொருளாதாரத்தில் பாதிப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட இந்த பதற்றம் சர்வதேச அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.தற்போது, ஈரான் முன்வைத்த 14 முக்கிய அம்சங்களை அமெரிக்கா ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் இந்த அமைதி ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் பொருளாதார நிலைத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *