நாடு முழுவதும் ஏழை எளியோரின் வாழ்வாதாரத்திற்கு ரேஷன் கடைகள் மூலமாக, மலிவு விலையில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை போன்ற உணவு பொருட்கள் மத்திய, மாநில அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன. இதைத்தவிர, கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் கீழ் இலவசமாக உணவுப் பொருட்கள் 2020 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், மத்திய அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது. ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்களை மறுபடியும் சேர்க்க மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஒருவேளை உங்களுடைய ரேஷன் கார்டில் இருந்து உங்கள் பெயரையும் நீக்கியிருந்தாலும், கோதுமை, அரிசி, தானியங்கள் போன்ற ரேஷன் உதவிகள் இனி உங்களுக்கும் கிடைக்குமாம். உங்கள் பெயர் நீக்கப்பட்டிருந்தாலும், மத்திய அரசின் ரேஷன் கார்டு பட்டியலில் உங்கள் பெயர் விரைவில் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு பட்டியலில் உங்கள் பெயரைச் சேர்க்க அருகில் உள்ள உணவு வழங்கல் துறைக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களின் நகல்களையும் இணைத்து தந்தாலே போதும். உங்கள் பெயர் மறுபடியும் சேர்க்கப்பட்டுவிடும். மத்திய அரசு பிறப்பித்திருக்கும் இந்த உத்தரவானது, பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது. அத்துடன், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், இப்படியொரு அறிவிப்பு மத்திய அரசுக்கு மிகுந்த பலனை மக்களிடம் பெற்றுத்தரும் என்றும் நம்பப்படுகிறது.

